சென்னை: தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே இருந்த நிலையில் நேற்று சென்னையின் பெரும் பாலான கடைகளில் கூட்டம் அலைமோதியது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிந்ததால் கடைசி நேர விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
காலையிலிருந்தே சென்னையில் உள்ள கடை வீதிகளில் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் கூட்டம் காணப்பட்டது.
பெருநகரின் வர்த்தகப் பகுதியான தி.நகர், பழைய வண்ணாரப் பேட்டை, புரசைவாக்கம், அண்ணா நகர், வடபழனி, பெரம்பூர், மைலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், நுங்கம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.
பிரபல ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள் திறப்பதற்கு முன்பே மக்கள் கூடி காத்திருந்தனர். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஊர்ந்து சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தீபாவளியையொட்டி திடீர் கடைகளும் உதயமாகி, வீதியில் உள்ள கடைகளிலேயே பெரும்பாலான தீபாவளி பொருட்களை மக்கள் வாங்கினர்.
இனிப்புக் கடைகளிலும் மக்கள் கூட்டமாக மொய்த்தனர். உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு கொடுப்பதற்காக அன்பளிப்பு பெட்டிகளைப் பலர் வாங்கி சென்றனர்.
தீபாவளியின் உச்சக்கட்டமாக பட்டாசு இருப்பதால் பசுமை பட்டாசு விற்பனையும் அமோக நடந்தது. சென்னையில் பல பகுதி களில் பெரிய அளவிலான கடைகள் அமைத்து பட்டாசு விற்கப்படுகின்றன. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பெற்றோர் பலதரப்பட்ட பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். இவ்வாண்டு பட்டாசு விலை அதிகரித்தாலும் மக்கள் கவலைப்படுவதாக இல்லை. பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
தீவுத்திடலில் 35 பட்டாசுக் கடைகள் ஒரே இடத்தில் செயல்படு வதால் அந்த இடமே திருவிழா போல காட்சி அளித்தது.
பேருந்து, ரயில் தவிர சொந்த வாகனங்களிலும் மக்கள் கடை களுக்குச்சென்று தீபாவளி பொருட்களை வாங்குவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சுமார் 18.000 காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே பாஜக தலைவர் அண்ணாமலை," "நிறைய பட்டாசு களை வெடியுங்கள். ஒருநாள் ஏற்படும் காற்று மாசு பற்றி கவலைப் படாதீர்கள், பட்டாசு உற்பத்தி செய்யும் சிவகாசி மக்கள் வாழவேண்டும்," என்றார்.

