அன்புமணி இடத்தில்
ஜி.கே. மணியின் மகன்
சென்னை: பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகனும் லைகா திரைப்பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான தமிழ்க்குமரன் நியமிக்கப் பட்டுள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜி.கே.எம். தமிழ்க் குமரனுக்கு மருத்துவர் ராமதாஸ் நேரில் நியமனக் கடிதத்தை வழங்கினார்.
பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கௌரவ தலைவராகவும் இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராகவும் பொறுப்பு ஏற்றதால் பாமக இளைஞரணித் தலைவராக தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
தலைவராக டாக்டர் நாகராஜன்
மதுரை: மதுரையில் உருவாக்கப்படவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த நியமனத்துக்குப் பிறகு பேசிய டாக்டர் நாகராஜன், முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கான இடத்தை ஆய்வு செய்து முழு விவரங்களை சேகரிக்கப்போவதாக தெரிவித்தார். மத்திய அரசும் மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
பழனி முருகன் கோயிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்
கவுந்தப்பாடி: பழனி முருகனுக்கு 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடை பெற்றது. இந்த ஏலத்துக்குச் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 2,747 மூட்டைகளில் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
மொத்தம் 1,095 மூட்டைகளில் 65,700 கிலோ எடையுள்ள நாட்டுச் சர்க்கரையை 27 லட்சத்து 9 ஆயிரத்து 190 ரூபாய்க்கு பழனி பாலதண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்ததாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

