சென்னை: நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தென்மேற்குப் பருவமழை விலகி நாளைமறுநாள் வடகிழக்குப் பருவமழை தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுவாக தென்மேற்கு பருவமழை விலகியதுமே வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு நேற்றுடன் தென்மேற்கு பருவமழை விலகினாலும் தென்கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக காற்று வீசும் திசை மாறியுள்ளது.
அதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்றுக் காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று பின்னர் வடக்கு-வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன் பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை பங்ளாதேஷ் கடற்கரையைக் கடக்கும். அதன் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அது கூறியது.
இந்தப் புயல், கடல் பரப்பில் இருந்த ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துக் கொண்டு சென்றுவிடும் என்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் வலுவாக இருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 71 அடி நீர்மட்டம் கொண்ட வைகை அணை, மழை காரணமாக அதன் வரலாற்றில் ஆறாவது முறையாக நிரம்பியது.
எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

