ராமேஸ்வரம்: இலங்கையில் பொருளியல் நிலவரம் சரியில்லாமல் இருப்பதால் மக்கள் பாடாதபாடு படுகிறார்கள்.
அந்த நாட்டுத் தமிழர்கள் பலரும் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தி என்ற கணவரை இழந்த 42 வயது மாது தன் இரண்டு பிள்ளைகளோடு தமிழ் நாட்டுக்கு வர முடிவு செய்தார்.
சட்ட விரோதமாக தமிழ்நாட்டுக்கு வர தேவைப்பட்ட 60,000 இலங்கை ரூபாயைப் பெற வழி இல்லாததால் அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தன் வீட்டை விற்றுப் பணத்தைத் திரட்டினார்.
மன்னாரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தன் பிள்ளைகளுடன் படகில் புறப்பட்ட அந்த மாது, அடுத்த நாள் அதிகாலையில் தனுஷ்கோடியில் இறக்கிவிடப்பட்டார். வழி எதுவும் தெரியாமல் அழுதுகொண்டு இருந்த அந்த மாதையும் பிள்ளைகளையும் மீட்ட தமிழக அதிகாரிகள் அவர்களை முகாமிற்குக் கொண்டு சென்று உண்ண உணவு, இருக்க இடம் கொடுத்து உதவியதாக தகவல்கள் தெரிவித்தன.

