கத்தாரில் 7 மீனவர்கள் சிறை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை, இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த ஏழு தமிழக மீனவர்கள் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து மீன்பிடிப்பதற்காக சென்றனர்.
அவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கத்தார் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேன் கவிழ்ந்தது; இருவர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடப்பதாகவும் அவர்கள் கூறினர்.
ரூ.2.60 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை: மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த மூன்று பயணிகளிடம் தங்கப்பசை உட்பட 3.74 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1.63 கோடி. மூவரும் கைதாயினர்.
இந்நிலையில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் 2.195 கிலோ தங்கப்பசை இருந்தது. அதன் மதிப்பு ரூ.96.09 லட்சம். அந்த தங்க பசையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுங்கத்துறையினர் சோதனையில் ரூ.2.60 கோடி மதிப்புள்ள மொத்தம் 5.935 கிலோ தங்கம் பிடிபட்டது. ஒருவர் தேடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தானியங்கி நடைமேடைகள்
புதுடெல்லி: முக்கிய வழிபாட்டுத்தலங்கள் சூழ்ந்துள்ள மயிலாடுதுறையில், அதன் ரயில் நிலையத்தின் பயணிகள் வசதிக்காக தானியங்கி நடைமேடைகள் அமைக்கப்படும் என்று இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்து இருக்கிறார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், பயணிகள் நாள்தோறும் ரயில்கள் மூலம் மயிலாடுதுறை வழியாக பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கின்றனர்.
அவர்களின் வசதிக்காக இரண்டு தானியங்கி நடைமேடை களை ரயில் சந்திப்பு நிலையத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்து இருந்தார்.

