அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியவளையம் என்ற கிரா மத்தைச் சேர்ந்த மலர்விழி, 29, கண்ணகி, 40, என்ற இரு மாதர் களும் வயலில் காளான் பறிக்கப் போய் காணாமல் போய்விட்டனர்.
இதனையடுத்து, திருமதி மலர்விழியின் கணவரான கலைமணி என்பவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். காவலர்களும் ஊர்மக்களும் சேர்ந்து எங்கும் தேடியதில் கடைசியில் காட்டுப் பகுதியில் உள்ள வயல்வெளியில் அந்த இரு மாதர்களும் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது பின்னர் தெரியவந்தது.
அவர்கள் அணிந்திருந்த ஆறு பவுன் நகைகளைக் காணவில்லை. நகைக்காக அவ்விருவரையும் யாரோ கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை புலன்விசாரணையைத் தொடங்கியது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு அதிகாரிகள் தடயங்களைத் தேடினர். ஆனால், அந்த நாய்கள் அருகே இருக்கும் ஒரு சாலையில் போய்ப் படுத்துவிட்டன. தடயவியல் வல்லுநர்களுடன் புலன்விசாரணை மும்முரமாக நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.
பொதுவாக கண்ணகி மட்டுமே காளான் பறிக்க வயலுக்குச் செல்வார் என்றும் சம்பவம் நிகழ்ந்த அன்று அவருடன் மலர்விழியும் சென்றிருப்பது ஏன் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகிக்கு 24 வயதில் மகன் இருக்கிறார். மலர்விழி தம்பதிக்கு 5 மற்றும் 11 வயதில் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

