செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2efbdd01-c675-46a0-a3e2-4d349a243edd
-

எரிவாயு தோம்பு வெடித்து கார் இரண்டாகி எரிந்தது; ஒருவர் பலி

கோவை: உக்கடம் அருகே காரில் இருந்த எரிவாயுத் தோம்பு வெடித்து ஒருவர் உயிரிழந்ததாக நேற்று அதகாரிகள் தெரிவித்தனர். அந்தச் சம்பவத்தில் கார் இரண்டாக உடைந்து நொறுங்கியது. சாலை தடுப்புமேடு ஒன்றில் கார் ஏறி இறங்கியபோது தோம்பு வெடித்தது என்றும் விசாரணை நடப்பதாகவும் காவல்துறை கூறியது.

ராமஜெயம் கொலையில் துப்பு

திருச்சி: திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலை வழக்கில் இப்போது முக்கிய துப்பு கிடைத்துள்ளது என்று சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் திருச்சியில் தெரிவித்தார்.

"ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக, முறையாக நடந்து வருகிறது. துப்பு கிடைத்துள்ளது. விசாரணை முடிந்த பின்னர்தான் முழு விவரங்களைத் தெரிவிக்க முடியும். அதற்கு முன்பாக நான் எதையும் கூற முடியாது," என்று அவர் கூறிவிட்டார்.

முதல்வர் தலைமையில் மன்றம்

சென்னை: தமிழக அரசு, பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அரசுக்குக் கொள்கைகள், வழிகாட்டி நெறிமுறைகளைப் பரிந்துரைக்கவும் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் 22 பேரைக்கொண்ட மன்றம் ஒன்றை அமைத்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவித்தது.

அமைச்சர் நிர்மலா: தமிழில் பேசுக

சென்னை: அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் ஒரு மில்லியன் பேருக்குப் பணி நியமனம் வழங்கும் நோக்கில் 'ரோஸ்கார் மேளா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதையொட்டி 50 மத்திய அமைச்சர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். அதில் 170 தமிழர்கள் உள்ளிட்ட 255 பேருக்கு மத்திய அரசுப் பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நியமனம் பெற்றவர்களிடம் பேசிய அமைச்சர் தமிழில் பேசும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.