சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், முன்னோர்களின் கட்டுப்பாடு காரணமாக 61 ஆண்டு களாக தீபாவளித் திருநாள் கொண்டாடாமல் இருந்து வருகின்றனர்.
ஐப்பசி மாதத்தில் கடன் வாங்கி வேளாண் பணிகளைத் தொடங்கும் சூழலில், தீபாவளித் திருநாளும் வருவதால் அதற்காக கடன் வாங்கி மக்கள் சிரமப்பட்டுள்ளனர்.
இதனால், கடந்த 1958ஆம் ஆண்டு ஊர்த் தலைவர்கள் தலைமையில், சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பட்டி, ஒப்பிலான் பட்டி, தும்பைப்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி கடன் வாங்கி தீபா வளியைக் கொண்டாடக் கூடாது என முடிவெடுத்தனர்.
இதுதொடர்பாக அங்குள்ள மக்கள் குலதெய்வக் கோயிலில் சத்தியம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி 12 கிராமங்களில் தீபாவளிக் கொண்டாட்டம் என்பது அறவே கிடையாது.
இதுகுறித்து மாம்பட்டியைச் சேர்ந்த சுதா கூறுகையில், "எங்களுக்கு விவரம் தெரிந்த காலம் முதல் கடந்த 61 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தினர் தீபாவளியைக் கொண்டாடுவது இல்லை. பலகாரம் சுடுவதில்லை. புத்தாடைகள் அணிவதில்லை.
"விவசாயக் காலத்தில் புத்தாடை எடுப்பது, பலகாரங்கள் செய்வதற்கு நமக்கு வசதி போதாது. அதனால் தீபாவளி வேண்டாம், பொங்கலை மிகவும் சிறப்பாகக் கொண்டாடிக் கொள்வோம்," என எங்களது முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனைப் பின்பற்றி வருகிறோம்," என்றார்.
தீபாவளிக் கொண்டாட்டங்களைவிட வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கிராமமக்கள் கூறினர்.
61 ஆண்டுகளுக்கு முன், தீபாவளியைக் கடன் வாங்கி கொண்டாடியதால் அறுவடைக் கடனை செலுத்தமுடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். வறுமைக்காக கொண்டாட்டங்களை நிறுத்திய கிராம மக்கள், இன்று அதிலிருந்து மீண்டுவந்தாலும் கூட முன்னோர்களின் கட்டுப்பாடடை அவர்கள் மதித்து வருகின்றனர்.
இந்தக் கிராம மக்கள், வேலைக்காக வெளியூர் சென்றாலும்கூட முன்னோர்களின் கட்டுப்பாட்டை மதித்து அங்கும் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என தெரிவித்தனர்.
இதனிடையே, சென்னையில் தீபாவளித் திருநாளன்று, அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அனு மதிக்கப்பட்ட அளவைவிட ஒன்றரை மடங்கு அதிகரித்து இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

