கோவை: கோவை மாநகரில் காரில் எடுத்துச்செல்லப்பட்ட சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறி யதில், காரை ஓட்டிச்சென்றவர் உயிரிழந்தார்.
அவர், ஜமேஷா முபின், 25, என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், முகம் மது அசாருதீன், 23, ஃபைரோஸ் இஸ்மாயில், 27, முகம்மது தல்கா, 25, முகம்மது நவாஸ் இஸ்மாயில், 26, முகம்மது ரியாஸ், 27, ஆகிய ஐவரை நேற்று முன்தினம் இரவு காவலர்கள் கைது செய்தனர்.
காரில் இருந்து ஆணி, சிறுசிறு பால்ரஸ் குண்டுகள் சிதறியதை அடுத்து, ஜமேஷா முபின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
முபின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான வேதிப்பொருள்களை கிலோ கணக்கில் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிறன்று அதிகாலை நடந்த இக் கார் விபத்தின் எதிரொலியாக, கோவை மாநகரம் பாதுகாப்பு வளையத்துக் குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
10 மாவட்டக் காவலர்கள், 240 மத்திய துணை ராணுவப்படையினர் என ஏறக்குறைய 3,000 பேர் அங்கு பாதுகாப்புக்காக ஈடுபட்டுள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவம் கோவில் களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள கோவில்களில் காவலர்கள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனிடையே, முபின் உடல் உடல்கூராய்வுப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது மனைவிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், உடலை அடக்கம் செய்ய கோயம்புத்தூரில் உள்ள ஜமாத்துகள் முன்வரவில்லை.
கோவையில் அனைத்து ஜமாத்து களும் அமைதியை விரும்புவதாகவும் சமூக விரோதச் செயலுக்குத் திட்ட மிட்ட முபின் உடலை அடக்கம் செய்ய மனம் வரவில்லை எனவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் கோவை பூச்சந்தை ஜமாத்தில் முபினின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முபினுக்கும் 2019ல் கொழும்பு தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு கைதிக்கும் தொடர்பிருப் பதாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது.