செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cb396a17-06ff-46b1-874e-3057fc4b1a92
-

25 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட ரயிலுக்கு வரவேற்பு

கும்பகோணம்: தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விரைவு ரயில் சேவை இயங்கியது. ஒரு தீபாவளி பரிசு போல் இந்த ரயில் சேவை கிடைத்துள்ளதால், கும்பகோணத்துக்கு வந்த ரயிலை பயணிகள் வரவேற்று இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

அகல ரயில் பாதை அமைக்கும் பணி முற்றிலும் நிறைவு பெற்றதை அடுத்து, 25 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவு ரயில் சேவை தொடங்கியுள்ளது.

ரூ. 400 கோடிக்கு பட்டாசு விற்பனை

சென்னை: மாநிலம் முழுவதும் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக விற்பனை மந்தமாக இருந்துவந்த நிலையில், இவ்வாண்டில் 95 விழுக்காடு பட்டாசுகள் விற்றுள்ளதாகக் கூறினர். தமிழகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை நடந்திருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

கோடநாடு பங்களாவில் சிபிசிஐடி காவலர்கள் நேரில் ஆய்வு

நீலகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் கோடநாடு பங்களாவுக்குச் சென்று மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி இருந்தனர். அதேபோல், அங்கு பணிபுரியும் காசாளர், கணக்கீட்டாளர்களிடமும் விசாரணை நடைபெற்றது.

உயிரிழந்தவர் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்ற அப்பாவு

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் பிள்ளைகள் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உறுதியளித்துள்ளார். பணகுடி அருகே உள்ள தாம்போதி பாலத்தைக் கடக்க முயன்ற இசக்கிமுத்து என்பவர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.