குன்னூர்: குன்னூரைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவர் 100 வயதாகியும் உடல் பாதிப்புகள் எதுவுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.
இதற்குச் சரியான உணவை சரியான அளவில் எடுத்துக்கொள்வதே முக்கிய காரணம் எனவும் அவர் ரகசியம் கூறியுள்ளார்.
விடிவதற்கு முன்னதாகவே எழுந்து, குளித்து, பிரார்த்தனை செய்வது என தன் வேலையை இப்போதும் செய்துவருகிறார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் உள்ள பொரையரட்டி கிராமத்தில் வசித்து வரும் லட்சுமியம்மாளின் கணவர் காலமாகிவிட்டார். மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
லட்சுமியம்மாளின் தங்கை, ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் 96 வயதில் காலமானார்.
மூன்றாவது தலைமுறையின ரையும் பார்த்துவிட்ட லட்சுமி அம்மாள், வார்த்தைக்கு வார்த்தை 'எல்லாம் அவன் செயல்' என்கிறார்.
தற்போது சில வார்த்தைகளை மட்டுமே பேசும் தன் பாட்டி குறித்து பேரன் குருமூர்த்தி கூறுகையில், "விவசாயம், கால்நடை வளர்ப்பு என இளம்பருவத்தில் உடல் உழைப்பில் அதிக அக்கறை காட்டிய என் பாட்டி, சரியான நேரத்தில் முறையான உணவுகளை உட்கொள்வார். ராகி, சாமை உட்பட தானிய வகை உணவுகளை அதிகம் உட்கொள்வார். அசைவ உணவை அவர் பார்த்ததுகூட கிடையாது.
"அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது முதல் உணவு உட்கொள்வது வரை கடிகாரம் பார்க்காமலேயே அத்தனை வேலை களையும் முறையாகச் செய்வார்.
"அவரின் வாழ்க்கை எங்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. நாங்களும் அவரைப் பின்பற்றி நடக்கவும் பார்க்கும் உணவை எல்லாம் வாயில் போட்டு உடலை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்," என்றார்.

