புதுக்கோட்டை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தன்னைக் குற்றவாளி என கூறப்பட்டுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஜெயலலிதா அம்மாவை இழந்து தவிக்கக் கூடிய எங்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல் இந்த அறிக்கை உள்ளது," என்றார். அத்துடன், "மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. பொது வாழ்க்கைக்கு வந்துள்ள நாங்கள், இந்தக் குற்றச்சாட்டை சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி சட்டப்படி எதிர்கொள்வோம்," என்று கூறினார்.

