தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவராகப் பாசாங்கு செய்து, தங்களின் அந்தரங்கப் பாகங்களைக் காட்டும் படங்களையும் காணொளிகளையும் அனுப்புமாறு 35 பெண்களை ஏமாற்றிய 37 வயது ஊய் சுவென் வெய் (படம்) என்ற ஆடவருக்கு நேற்று 40 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆள் மாறாட்டம் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளை மலேசியரான ஊய் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஊய் ஃபேஸ்புக் தளத்தில் 'டாக்டர் ஜெனிஸ் லீ யென் ஹூய்' என்ற போலிக் கணக்கை உருவாக்கி மலேசிய மாது ஒருவரின் படத்தை அந்தக் கணக்குக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆண், பெண் என இரு பாலாரையும் தனது ஃபேஸ்புக் கணக்கில் நண்பர்களாக்கிக் கொண்டதுடன் அதே பெயரில் இன்ஸ்டகிராம், லிங்க்ட்இன் தளங்களிலும் அவர் இயங்கி வந்ததாக அறியப்படுகிறது.
பின்னர், ஒரு சில பெண்களைக் குறிவைத்து மார்பகம் மற்றும் பாலியல் சுகாதாரம் தொடர்பான மருத்துவத் திட்டம் ஒன்றைப் பற்றி தான் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறி, ஊய் மாதாந்திர ஆலோசனை அமர்வுகளுக்குக் கோரியதாகவும் இதற்காக தங்களின் அந்தரங்கப் பாகங்களைக் காட்டும் காணொளிகளை அனுப்பும்படி அந்தப் பெண்களை ஊய் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. காணொளிகளைப் பார்வையிட்ட பிறகு தன்னால் அந்தப் பெண்களிடம் உள்ள சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய சிகிச்சைத் திட்டங்களை வழங்க முடியும் என்று ஊய் அப்பெண்களை நம்ப வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஊய் மொத்தம் 919 படங்களையும் காணொளிகளையும் 2018க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவிறக்கம் செய்ததாக அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சந்தேகத்தில் ஊய்யின் அடையாளம் குறித்து ஆராய்ந்ததில் அப்படிப்பட்ட ஒருவரே இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் காவல் துறையிடம் புகாரளித்து கடந்தாண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று ஊய் கைதானதாகக் கூறப்பட்டது.

