போதைப்பொருள் புழக்கம், வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவை தொடர்பான குற்றங்களுக்குச் சிறைக்குச் சென்று வந்த சூ சியாவ் வீ, 50, கிளமெண்டியில் வெறித்தனத்துடன் தாக்குதல் நடத்தியதை அடுத்து காவல் அதிகாரி ஒருவரால் சுடப்பட்டார் சூ. சூவுக்கு நேற்று ஈராண்டு, 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று கேலாங் பகுதிக்கு சூ சென்று மருத்துவக் குறிப்பு இல்லாமல் 'டயஸெபாம்', இருமல் மருந்து ஆகியவற்றை உட்கொண்டதாகவும் அதன் பின்னர் கிளமெண்டியில் உள்ள தன் அம்மாவின் வீட்டுக்குச் சென்று தன்னையும் தன் அம்மாவையும் யாரோ கொல்ல வருகிறார்கள் என்று காவலர்களுடன் தொடர்புகொண்டு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழிபோக்கர்களை வெட்டித் தாக்குமாறு தனக்கு ஒரு குரல் கூறியதாக நம்பி, கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறி சூ, ஒருவரைத் தாக்கியதாக அறியப்படுகிறது.
பின்னர், டாக்சியில் ஏறிய சூ, கிளமெண்டி காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு ஓட்டுநரிடம் கூறிவிட்டு அவ்விடத்தை நெருங்குகையில் டாக்சி நகரும்போதே அதிலிருந்து இறங்க முயன்றதாகக் கூறப்பட்டது.
டாக்சி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்கியபோது அவரையும் சூ தாக்கச் சென்றார். ஆனால் டாக்சி ஓட்டுநர் தப்பிவிட்டார்.
சூ பின்னர் காவல் நிலையத்தின் வாசலை நோக்கிச் சென்று புரியாத வண்ணம் பேசினார். திடீரென 20 வயது அதிகாரி ஒருவரைத் தாக்கச் சென்றபோது இடது கையில் அந்த அதிகாரி சூவைச் சுட்டார். கீழே விழுந்த சூ, கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

