தீபாவளிக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி; கோவில்களைக் குறி வைத்தது அம்பலம்
கோவை: அண்மையில் காரில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதாகியுள்ள நிலையில், கோவையின் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 23ஆம் தேதி கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு சென்று கொண்டிருந்த கார் ஒன்று, அதிகாலை சுமார் நான்கு மணிஅளவில் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அந்தக் காரில் இருந்த ஜமேஷா முபின் (29 வயது)என்பவர் பலியானதாகவும் இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
முபின் வீட்டில் சோதனையிட்டபோது பல்வேறு விதமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கோவையில் உள்ள கோவில்களில் தாக்குதல் நடத்துவதே பயங்கரவாதிகளின் திட்டம் என்றும் அதை நிறைவேற்ற திட்டமிட்டிருந்த நிலையில்தான் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஐந்து இடங்களை பயங்கரவாதிகள் தேர்வு செய்திருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையைத் தொடங்கி உள்ளது. கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டுக்கு அருகே உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டபோது, கைதான ஐந்து பேரும் பெரிய மூட்டை ஒன்றை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. நிறைய வெடிபொருள்களை அவர்கள் இடம் மாற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் டைரி ஒன்றைக் கைப்பற்றி உள்ளதாகவும் அதில் பல்வேறு முக்கியமான தகவல்கள் உள்ளதாகவும் மற்றோர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அவற்றின் அடிப்படையில் கணக்கிடும்போது, தீபாவளி பண்டிகையின்போது கோவையில் பயங்கர தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு, அது தோல்வியில் முடிந்துள்ளதாக கருத வேண்டி உள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கோவை, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டார். அதன் பின்னர், இது தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

