ராமதாஸ்: சாதனை அல்ல, அவமானம்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தீபாவளியின்போது மது விற்பனை அதிகமாக நடைபெற்றிருப்பது சாதனையல்ல, அவமானம் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தீபாவளிக்கு முதல் நாளில் ரூ.259 கோடிக்கும் தீபாவளி அன்று ரூ.300 கோடிக்கும் மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மது விற்பனை அதிகரித்து இருப்பது எந்த வகையிலும் சாதனை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை விலங்கு குட்டிகள் பறிமுதல்
சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஐந்து தேவாங்கு குட்டிகள் சுங்க இலாகா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப் பொருள்களுக்கு அடுத்தபடியாக பல்வேறு விலங்குகளும் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் பேங்காக் நகரில் இருந்து வந்த விமானத்தில், சென்னையைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் தேவாங்குக் குட்டிகளைக் கொண்டு வந்தார். வழக்கமான சுங்கப் பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்தபோது, அவர் தன் கையில் வைத்திருந்த பை லேசாக அசைந்ததை அடுத்து அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து பையை சோதனையிட்டபோது அதில் அரிய வகை தேவாங்குக் குட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.
211 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்
சென்னை: இம்முறை தீபாவளியன்று மாநிலம் முழுவதும்
பெரும்பாலான பகுதிகளில் பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் வழக்கத்தைவிட பட்டாசுக் கழிவுகள் அதிகம் சேர்ந்தன. இந்த ஆண்டு 211 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்தது. இதற்கிடையே தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 271 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காலை 6 முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது
சென்னை: எதிர்வரும் 29ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள் ளார். வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அன்றைய தினம் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று அவர் கூறினார். நடப்பாண்டில் பருவ மழைப்பொழிவு சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

