சென்னை: கடந்த 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு எழுச்சியைவிட, நடப்பாண்டில் தமிழர்கள் கூடுதல் எழுச்சி பெற வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
இந்தி மொழி தெரியாதவர்கள் மத்திய அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற நிலையை உருவாக்க முயற்சி நடப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய அரசு இந்தி மொழி பேசாத மக்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் அம்மொழியை மறைமுகமாக திணிக்க முயற்சி செய்வதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் பயிற்சி மொழியாக இந்தியைக் கொண்டு வந்து ஆங்கிலத்தை அகற்ற முயற்சி நடப்பதாகச் சாடினார்.
"வாழ்வோடும் வசதியோடும் இருக்க தமிழ், ஆங்கிலம் தெரிந்தால் போதும். இந்தி மொழி மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை. இந்தி மொழியை மதிக்கிறோம். ஆனால் அதை திணிக்காதீர்கள்.
"தமிழ் மொழி ஃபீனிக்ஸ் பறவை போன்றது. அதை அழித்தாலும் மீண்டும் உயிர்த்தெழுந்து வரும். முந்திரி இருக்கும் மூட்டையில், வண்டுகளை நுழையவிட்டால் முந்திரியை அழித்துவிடும்," என்றார் வைரமுத்து.
இந்தி நேற்று பிறந்த மொழி என்று குறிப்பிட்ட அவர், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படிப் புறந்தள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

