76.5 கிலோ வெடிபொருள் பிடிபட்டது; பல இடங்களில் சோதனை தொடர்கிறது
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆறாவது சந்தேக நபரை நேற்று கைது செய்தனர்.
கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகே இம்மாதம் 23ஆம் தேதி அதிகாலைஒரு கார் இரண்டாக வெடித்துச் சிதறியதில் ஜமேஷா முபின், 29, என்பவர் பலியானார்.
அதையடுத்து, முகம்மது தல்கா, 25, முகம்மது அசாருதீன், 23, முகம்மது ரியாஸ், 27, ஃபரோஸ் இஸ்மாயில், 27, முகம்மது நவாஸ் இஸ்மாயில், 26 ஆகிய ஐவர் ஏற்கெனவே கைதாயினர்.
அந்த ஐவரையும் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், ஆறாவது சந்தேகப் பேர்வழியாக அப்சர் கான், 28, என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இவர், கார் வெடிப்புச் சம்பவத்தில் மாண்ட முபினின் உறவினர் என அதிகாரிகள் கூறினர்.
மாண்டுபோனவரின் வீட்டில் இருந்து ஏறக்குறைய 76.5 கிலோ வெடிபொருளை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
அந்தப் பொருள், இணையத் தளங்கள் மூலம் கடந்த இரண்டாண்டு காலமாக வாங்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவற்றைக் கொண்டு பெரியளவில் பல இடங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, அதிகாரிகள் கோவை முழுவதும் 10 இடங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறின.
இதனிடையே, கோவையில் நேற்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்ட ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதேவேளையில், அந்த கார் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து வருகிற 31ஆம் தேதி கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக அறிவித்து இருக்கிறது.
கோவை ஒருபுறம் இருக்க, சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து தலைநகர் முழுவதும் அதிகாரிகள் விழிப்புநிலையில் உள்ளனர். பல்வேறு தங்குமிடங்களிலும் சோதனைகள் நடந்து வருகின்றன.
கோவை சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

