மழை: உப்பு விலை உயர்கிறது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு டன் ரூ.3,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த உப்பு, மழை காரணமாக ரூ.4,000ஆகக் கூடி இருக்கிறது என்றும் உப்பின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் ஏழு பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளது.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு: எட்டு மாவட்டங்களில் கொரோனா ஒழிந்தது
சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்று குறைந்து வரும் நிலையில், எட்டு மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் புதன்கிழமை 8,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநிலம் முழுதும் 183 பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது.
அரியலுார், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, பெரம்பலுார், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் தொற்று பதிவாகவில்லை.
மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு உள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் 386 பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 226 பேர் உப்பட 2,533 பேர் சிகிச்சை பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான் வேட்டை: நால்வர் கைது; துப்பாக்கி, வாகனங்கள் பறிமுதல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அத்திப்பாக்கம் காப்புக்காடு வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, மூன்று மோட்டார் சைக்கிள்கள், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, இறந்த நிலையில் இரண்டு புள்ளி மான்கள், இரு முயல்கள், ஏழு கிலோ மான் இறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
7 பேருக்கு 5 ஆண்டு சிறை
நாகர்கோவில்: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி சுற்றுக்காவல் பணியில் இருந்த மெர்சி ரமணிபாய் என்ற காவல்துறை பெண் அதிகாரியையும் இதர சிலரையும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கொல்ல முயன்ற வழக்கில் ஏழு பேருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
விசைப்படகில் 47 குண்டுகள் துளைத்ததற்கான அடையாளம்
நாகப்பட்டினம்: ராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்தபோது விசைப்படகு நிற்காமல் சென்றதாகக் கூறி இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த வீரவேல், 31, என்ற மீனவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மீனவர்கள் மீதும் விசைப்படகு மீதும் பல குண்டுகள் பாய்ந்தன.
இந்திய கடற்படையினர் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை நேற்று இந்திய கடற்படை அதிகாரிகள் சோதித்தனர். படகை 47 குண்டுகள் துளைத்துள்ளது தெரியவந்தது.

