சென்னை: சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சித்திரவாடியைச் சேர்ந்த கிருத்திகா, 12, என்ற அரசுப் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவி கடந்த 5ஆம் தேதி தன் வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கலைச்செல்வன், 20, என்ற மின்சாரத் துறை ஊழியர் தெரு விளக்கை மாற்றுவதற்காக மின் கம்பத்தின் மீது ஏறியபோது மின்கம்பம் முறிந்து, அருகே விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகா மீது விழுந்தது.
படுகாயம் அடைந்த சிறுமி கிருத்திகா சென்னை அரசு மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் சித்திரவாடி மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை பழம், மஞ்சள்தூள், குங்குமம், தலைமுடிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் கிருத்திகாவின் பெற்றோருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
வருவாய்த்துறையினர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோருடன் காவல்துறை அதிகாரிகள் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டினர்.
கிருத்திகாவின் தலை துண்டித்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. உடல் மறுபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது.
அமாவாசை, சூரிய கிரகணம் என்பதாலும் கிருத்திகா அவரது வீட்டுக்கு மூத்த மகள் என்பதாலும் மாந்திரீகத்துக்காக தலையைஎடுத்துச் சென்றார்களா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

