தமிழக எல்லை: கண்காணிப்பு தீவிரம்
சென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து கேரளா, தமிழகம் இடையேயான எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அவற்றின் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இறைச்சி, தீவினங்கள், முட்டைகளை கொண்டு வரும் வாகனங்கள் எல்லையில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
நவம்பர் 1 வரை கனமழை நீடிக்கும்
சென்னை: வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நவம்பர் முதலாம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அம்மையம் கூறியது. இதன் காரணமாக 24 மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்க லாம் எனவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டுப் பயணம்: ராமதாஸ் கவலை
சென்னை: மாணவர்கள் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்வதைத் தவிர்க்க தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். படிக்கட்டுப் பயணத்தின்போது தவறி விழுந்து மாணவர்கள் உயிரிழந்ததாக இனி செய்திகள் வெளிவரக் கூடாது என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "கடந்த இரு தினங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு விபத்துகளில் அரசுப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. "மாணவச் செல்வங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வேண்டும் என பல வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் கூட, அது பயனளிக்காததும் மாணவச் செல்வங்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணித்து உயிரிழப்பதும் கவலையளிக்கிறது," என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேவர் குரு பூசை: தீவிர பாதுகாப்பு
சென்னை: பசும்பொன் தேவர் குருபூசை விழாவையொட்டி, தென் மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் பத்தாயிரம் காவலர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் 14 ஆளில்லா சிறிய ரக வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

