சென்னை: நடப்பு ஆண்டில் மட்டும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையம் வழி அரங்கேறும் மோசடிகள் காரணமாக பணத்தை இழந்துள்ளனர்.
இத்தகவலை வெளியிட்டுள்ள காவல்துறையின் இணைய குற்றங்கள் தடுப்புப் பிரிவு, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு மட்டும், 'ஆன்லைன் வேலைவாய்ப்பு' என்ற பெயரில் நடந்த மோசடியில், 2,120 பேர் பணத்தைப் பறிகொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
படிப்பை முடித்து, வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளையர்கள், பெண்களுக்கு பகுதி நேர, முழு நேர வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க பல இணையநிறுவனங்கள் உள்ளன என்றும் அந்நிறுவனங்களில் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களை மோசடிப் பேர்வழிகள் திருடிவிடுவதாகவும் காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
"இவ்வாறு விவரங்களைத் திருடும் கும்பல், அதே நிறுவனங்கள் பெயரில், இளையர்களைத் தொடர்புகொண்டு பணம் பறித்து வருகின்றன. "அதன்படி, தமிழகம் முழுதும், 2021ல், 1,150 பேர் பணத்தைப் பறிகொடுத்தனர். நடப்பாண்டில், கடந்த பத்து மாதங்களில் மட்டும், 2,120 பேர் அளித்த புகார்படி, இணைய குற்றத்தடுப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 600க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரணையில் உள்ளன," என காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
பெரும்பாலான இணைய மோசடிகளுக்கு பொது மக்களின் அளவுக்கு மீறிய ஆசைதான் காரணமாக அமைகிறது என்றும் வேலைக்குப் பதிவு செய்துள்ளவர்களுக்கு வரும் கைப்பேசி குறுந்தகவல்களை மட்டுமன்றி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் தகவல்களையும் கவனமுடன் அணுக வேண்டும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
"இணையத்தில் வெளிவரும் தகவல்கள் நம்பத் தகுந்தவையா, உண்மையாகவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்டவையா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எந்த வகையில் கட்டணம் செலுத்த கோரினாலும் அதை தவிர்க்க வேண்டும்," என காவல்துறை கூறியுள்ளது.

