திண்டுக்கல்: தம்மை காதலித்து, கர்ப்பமாக்கிய பின்னர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதாக காதலன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார் ஆசிரியை ஒருவர். இதையடுத்து நேற்று நடைபெற இருந்த காதலரின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சினிமாவில் வரும் பரபரப்புக் காட்சியைப் போல் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் நிகழ்ந்தது.
வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த 30 வயதான நாகபிரியா பட்டப்படிப்பை முடித்து, தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அவருக்கும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சின்னசாமி என்பவருக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது.
சின்னசாமி பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், சின்னசாமிக்கு அவரது குடும்பத்தார் வேறு இடத்தில் வரன் தேடிவந்தனர். அண்மையில் அவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே திருமணம் நிச்சயமானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகபிரியா திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு சின்னசாமியிடம் கூறிஉள்ளார். ஆனால் சின்னசாமி அதை கண்டுகொள்ளவில்லை. நாகபிரியாவும் அவரை விடுவதாக இல்லை.
நேற்று காலை சின்னசாமிக்கு திருமணம் நடைபெற இருந்த திருமண மண்டபத்துக்கு வந்த அவர், தம்மை இரண்டு ஆண்டுகள் காதலித்து, கர்ப்பமடையவும் வைத்து சின்னசாமி ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மணமக்களின் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்தை நிறுத்தினர். அதன் பின்னர் நாகபிரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சினிமா பாணியில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்களால் திருமண மண்டபத்தில் பரபரப்பு நிலவியது.

