சிறப்பாக நடந்தேறிய சாணத் திருவிழா

சிறப்பாக நடந்தேறிய சாணத் திருவிழா

1 mins read
341bff3d-25ae-4c57-a123-7422e3340f96
கோவில் முன் குவித்து வைக்கப்பட்டுள்ள சாணம். படம்: ஊடகம் -

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் சாணத் திருவிழா நடைபெற்றது.

அங்குள்ள பீரேஸ்வரர் கோவிலில் இந்த விநோத திருவிழாவை விமரிசையாக நடத்தி வருகின்றனர். விழாவின்போது அப்பகுதியில் மாடு வளர்ப்பவர்கள், தங்கள் வீடுகளில் இருந்து பசு சாணத்தைக் கொண்டு வந்து கோவில் அருகே குவித்து வைக்கின்றனர்.

பின்னர் கழுதை மீது சாமி சிலையை வைத்து பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று திரும்பியதும் சாணத் திருவிழா தொடங்குகிறது.

அப்போது, சிறார்களும் வயதில் மூத்த ஆடவர்களும் மேலாடை அணியாமல், ஒருவர் மீது ஒருவர் சாணத்தை உருட்டி வீசி அடித்து மகிழ்கின்றனர்.

அதன் பின்னர் ஊர் குளத்தில் குளித்து வீடு திரும்பும் அனைவரும், மீண்டும் கோவிலுக்கு வந்து, அங்குள்ள சாணியை எடுத்துச் சென்று தங்கள் விளைநிலங்களில் வீசுவர். இதன் மூலம் விவசாயம் சிறப்பாக இருக்கும் என்பது அம்மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டும் இத்திருவிழா நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தேறியது.