செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
003acd2a-76ef-48a9-9e5c-a082c0094157
-

காவல்துறை: அனுமதியின்றி ஆளில்லா வானூர்திகள் பறக்கவிட்டால் நடவடிக்கை

சென்னை: காவல்துறையின் அனுமதியின்றி சென்னை மாநகரின் எந்தப் பகுதியிலும் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளைப் (டிரோன்கள்) பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் வானூர்திகள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் திருமணம், கோவில் திருவிழா, திரைப்படங்கள், குறும்படங்கள் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின்போதும் காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகே ஆளில்லா வானூர்திகள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பறக்கவிட்டு புகைப்படம், காணொளிகளை எடுக்க அனுமதியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் இவ்வாறு படம் எடுப்பது அதிகரித்துள்ளதை அடுத்து காவல்துறை இவ்வாறு எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேர் கைது

ராமேசுவரம்: ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து சிறைபிடித்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று ராமேசுவரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். வழக்கம்போல் கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென சுற்றுக்காவல் படகில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் சில படகுகளைச் சுற்றி வளைத்தனர். மற்ற படகுகள் விரட்டி அடிக்கப்பட்டன. அதையடுத்து ஏழு மீனவர்கள் இருந்த ஒரு படகை மட்டும், பறிமுதல் செய்த கடற்படையினர், அவர்களைக் கைது செய்வதாகத் தெரிவித்தனர். இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

முந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் ஊராட்சித் தலைவருக்கு சிறை

சிவகங்கை: குடிநீர் இணைப்பு தருவதற்காக முந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் ஊராட்சித் தலைவருக்கு சிவகங்கை நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி மேல மாகாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். இந்நிலையில், இணைப்பு தருவதற்கு அப்போது ஊராட்சித் தலைவராக இருந்த ராணி ஆரோன் 300 ரூபாய் லஞ்சம் கேட்க, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார் கணபதி. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலிசார் அளித்த ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கணபதி லஞ்சமாக அளித்தபோது, அதைப் பெற்றுக்கொண்ட ராணி ஆரோன் கையும் களவுமாக சிக்கினார். அவர் மீதான வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியில் அவருக்கு சிறைத்தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராணி மேல் முறையீடு செய்வார் எனத் தெரிகிறது.