மதுரை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி முறைக்கு நல்ல உதாரணமாக விளங்குகிறது என்று மத்திய வீட்டுவசதி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது 810 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்ட தலைமை அலுவலகத்தை நேற்று முன்தினம் அவரும் முதல்வர் மு க ஸ்டாலினும் இணைந்து திறந்து வைத்தனர்.
"மேலும், 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் மட்டும் இரண்டாவது கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நடை பெறுகின்றன. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமான திட்டம்," என்றார் அமைச்சர் ஹர்தீப் சிங்.
மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், வெகுவிரைவில், மெட்ரோ ரெயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இந்தியா மிஞ்சிவிடும் என்றார். மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சர் இவ்வாறு பேசி உள்ளார்.

