மதுரை: இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இந்தியை தீவிரமாக திணிக்க வேண்டும் என அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, அதிபருக்கு அறிக்கை அளித்த செய்தி கிடைத்ததும் நாட்டிலேயே முதல் முதல்வராக மு.க.ஸ்டாலின் அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கும் அனுப்பினார் தமிழக முதல்வர். இந்த தீர்மானத்தை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையிலும் குழு அறிக்கையை ஏற்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் நவ.4ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
"பெரம்பலூரில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா எம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்," என்று திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

