விழுப்புரம்: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் குறிப்பிட்டு தமக்கு வந்த மின்னஞ்சலை நம்பி ரூ.99,980 செலுத்திய ஆடவர் அப்பணத்தை இழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான சாதிக் பாஷா என்பவர் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் ஆவலில் தனது பெயரையும் இதர விவரங்களையும் தனியார் இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு முன்பின் அறிமுகமற்ற ஒருவரிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது.
அதில், சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர், இரு கைப்பேசி எண்களில் இருந்து அடுத்தடுத்து வந்த அழைப்புகளின்போது, அவரிடம் சிறிய அளவில் நேர்காணல் நடைபெற்றதால், நடப்பது அனைத்தும் உண்மை என நம்பியுள்ளார் சாதிக் பாஷா.
இறுதியில் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியவர்கள், அவர் பெயரில் விசா, காப்பீடு, விமானப் பயணச்சீட்டு ஆகியவற்றைப் பெறுவதற்கு ரூ.99,980 செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
அதை நம்பி சாதிக் பாஷா பணத்தை செலுத்திய பிறகு இந்நாள் வரை யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை.