நீலகிரி: கேரளாவில் மூன்றாவது முறையாக வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சலால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கான வாத்துகள் திடீரென உயிரிழந்தன. பரிசோதனையின் முடிவில் பறவைக் காய்ச்சலின் தாக்கம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்நோய்த்தொற்று மனிதர்களுக்குப் பரவாத வகையில் ஆங்காங்கே தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும்படி தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லாததால் பிராய்லர் கோழி, முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் கேரள மாநிலத்தில் இருந்து கோழி, வாத்து, முட்டைகள், கோழித் தீவனங்கள் ஆகியவற்றை கொண்டுவர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக-கேரள எல்லை மாவட்டமான கோவையில் உள்ள வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் ஆகிய ஆறு சோதனைச் சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் கண் காணிப்புப் பணிகள் நடக்கின்றன.
கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
அத்துடன், மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கோவை, நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பண்ணைகள் கண்காணிப்பில் ஈடுபட 45 அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பார்கள் என்று மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மூவர் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பரவா மல் தடுப்பதற்காக கோழி, வாத்து, காடை என எந்தப் பறவையாக இருந்தாலும் அவற்றை இங்கு நுழையவிடாமல் திருப்பி அனுப்பி வருவதாக சோதனைச் சாவடிகளைக் கண்காணித்து வரும் கால்நடைத்துறை அதிகாரி பகவத் சிங் கூறியுள்ளார்.
கேரளாவில் இருந்து கால்நடை களை ஏற்றிக்கொண்டு கன்னியா குமரி மாவட்ட எல்லையான படந்தாலுமூடு சோதனைச் சாவடிக்கு வந்த வாகனங்களை கால்நடை பராமரிப்புத் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
முட்டையின் விலை குறைய வாய்ப்புள்ளதால் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

