நாமக்கல்: கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியால், நாமக்கல் பண்ணைகளில் இரண்டு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
அத்துடன், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் முடங்கி உள்ளதால் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழகம்-கேரள எல்லையில் கால்நடைத்துறை அதிகாரிகளும் காவலர்களும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தொற்று நீக்கிய பின்னரே வாகனங்களை கால்நடைத் துறை அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
கேரளாவில் பறவைக் காய்ச்ச லைக் கட்டுக்குள் கொண்டுவரும் சோதனைகள் தொடரும் சூழலில், தமிழகத்திலும் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் சோதனைகள் நடத்தி, கிருமி நாசினிகளை கால்நடைத் துறை அதிகாரிகள் தெளித்தனர்.
பண்ணைகளுக்கு வரும் வாகனங்களும் வெளியே செல்லும் வாகனங்களும் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக முட்டை, கோழிகளின் விற்பனை சரிவடைந்துள்ளது. இதனால் 2 கோடி முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளன.
வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கி உள்ளது.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அறிவித்தால் மட்டுமே வர்த்தகம் மீண்டும் சீராகும் என்று கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரி விக்கின்றனர்.
இதனிடையே, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களிலும் எல்லைப் பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள், காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.