செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
07a7d077-a49f-4025-974a-9d2e66c79b8f
-
multi-img1 of 2

357,216 தீக்குச்சிகளைக் கொண்டு சார்லி சாப்ளின்; கின்னஸ் சாதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், அருமனை மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ராஜ், 34, (படம்), உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் உருவத்தை ஏறக்குறைய மூன்றரை லட்சம் தீக்குச்சிகளைக் கொண்டு உருவாக்கி உள்ளார். ஆறடி உயரத்தில் உருவான இந்தத் தீக்குச்சி ஓவியத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

"கோவில்பட்டியில் 40 கிலோ எடையுள்ள தீப்பெட்டிகளை ரூ.6,500க்கு வாங்கினேன். போக்குவரத்துக்கு மேலும் ரூ.800 செலவாகியது," என்றார் ஸ்ரீ ராஜ். "சாப்ளின் மிகவும் பிரபலமானவர், சிரமமான வாழ்க்கையிலிருந்து மீண்டவர். அதனால் அவரை ஓவியமாக்கினேன்," என்கிறார் அவர்.

ரூ.1 கோடி மோசடி; தம்பதி மாயம்

ஆரணி: ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் பணத்தை வசூலித்து மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதியைக் கண்டுபிடித்து பணத்தை மீட்டுத் தரும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்தவர்கள் வெண்ணிலா-சங்கர் தம்பதியர். இவர்கள் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட 30க்கும் மேலானோர் ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

மெய்நிகர் நூலகத்தைத் தொடங்கி

வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: தமிழகத்தில் முதன்முதலாக திருச்சி மாவட்டம், லால்குடியில் மெய்நிகர் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். மாநிலம் முழுவதும் 76 நூலகங்களுக்கு ஒரு நூலகத்திற்கு இரண்டு மெய்நிகர் கருவிகள் வீதம் 152 மெய்நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 155 நூலகர்களுக்கு இக்கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சூரசம்ஹாரம்: திருச்செந்தூர், பழனியில் குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர், பழனியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் அருகே உள்ள கடற்கரையில் சுவாமி ஜெயந்தி நாதர் சூரபத்மனை தன் வேல் மூலம் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா காரணமாக தடைபட்டுப் போன இந்நிகழ்வு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடந்த நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனி உள்ளிட்ட முக்கிய முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார நிகழ்வு நேற்று நடைபெற்றது.

பாம்புக்குப் பூசை செய்து வழிபாடு

வந்தவாசி: திருவண்ணா மலை மாவட்டம், வந்தவாசி அருகே வெட்டப்பட்ட வேப்பமரத்தின் அருகே கடந்த 15 நாள்களாக ஒரே இடத்தில் சாதுவாகப் படுத்துக்கிடக்கும் ஆறடி நீளமுள்ள நல்லபாம்பை அப்பகுதி மக்கள் அதிசய மாகப் பார்த்துச் செல்வதுடன், வழிபாடும் செய்து வருகின்றனர். பாம்பை அம்மனின் அவதாரமாகப் பார்க்கும் கிராம மக்கள் அதற்குப் பூசை செய்தும் பாலூற்றியும் வழிபட்டு வருகின்றனர்.