கோவை: கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறையினர் மீது அவதூறு பரப்புவதாக காவல்துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு குற்றம்சாட்டி உள்ளார்.
அண்ணாமலை கூறுவதுபோல் கோவை கார் விபத்துச் சம்பவத்தைக் குறிப்பிட்ட ஒருசிலர்தான் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக தமிழக காவல்துறை கைது செய்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கர்நாடக காவல் அதிகாரியான அண்ணாமலை, இதுபோன்ற உண்மையில்லாத செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி தமிழகக் காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கவேண்டாம் என்றும் சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறை மீது அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.
கோவை சம்பவம் குறித்து புலன் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே தவறான தகவல்களைக் கூறி திசை திருப்பி வருகிறார்.
மற்ற மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் பல மாதங்கள் கழித்துக்கூட என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இச்சம்பவத்தில் அப்படி தாமதம் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சு முன்கூட்டியே எச்சரித்ததாக அண்ணாமலை கூறுகிறார். இது அபத்தமானது. மத்திய அரசு உத்தரவிடும் முன்பே, முதல்வர் ஸ்டாலின் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்ததாகவும் சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, தமிழக காவல்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் தகுந்த பதில் அளிக்கப்படும் என்று அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோவைச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரிக்கும்போது என்னிடம் உள்ள ஆதாரங்களைச் சமர்ப்பிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் நேற்று தங்களது விசாரணை யைத் தொடங்கினர்.
அவர்களிடம், கடந்த 23ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது முதல் இப்போது வரை சேகரித்துள்ள அனைத்து ஆவணங்களையும் கோவை மாநகரக் காவலர்கள் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், கோவை கார் வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், சங்கமேஸ்வரர் கோயில் அர்ச்சகரிடமும் விசாரணை நடத்தினர். விபத்தால் சேதமடைந்த கோயிலின் முன்பகுதியையும் அவர்கள் பார்வையிட்டனர். அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.