கோயம்புத்தூர்: கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கோவையில் முகாமிட்டுள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆறு பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டம், உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கார் வெடித்ததில் ஜமேஷா முபின், 28, உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதான நிலையில், என்ஐஏ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ஸ்ரீஜித் மேற்பார்வையில் என்ஐஏ அதிகாரிகள் அறுவர் நேரில் வந்து கார் வெடித்த இடத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
கோயில் அர்ச்சகர், நிர்வாகி, கோயில் அருகே இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி, கோவி லிலும் வெளிப்புறப் பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
என்ஐஏ அதிகாரிகளுக்கு உதவியாக 14 காவலர்கள் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். உளவுப் பிரிவு காவலர்களும் ரகசியக் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகப்படும்படி உள்ளவர்களின் இல்லங்களிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது, 38, சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசன் அலி, 35, ஆகிய இருவரின் வீடுகளிலும் 10 காவ லர்கள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என் றும் கூறப்படுகிறது.
இதேபோல், திருப்பூர் மாவட்டம், ராக்கியாபாளையம் அருகே வசித்து வரும் அப்துல் ரசாக், 32, என்பவரின் வீட்டிலும் மாநகர காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கடந்த 2017ல் ரசாக்கிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை விடுவித்தனர்.
இதனிடையே, கோவை கார் வெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவலர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.
சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் இம்மாதம் 14ஆம் தேதி இரவு வரை தடைவிதித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், சென்னையில் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 1,027 வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், முபின் காரில் சமையல் எரிவாயு உருளையை ஏற்றிய சகோதரர்கள் ஃபைரோஸ், நவாஸ், அண்டை வீட்டுக்காரரான முகமது ரியாஸ் ஆகிய மூவரும் அவர்களது தாயார் அறிவுரையின்படி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.