கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையத்தில் வடமாநிலத் தம்பதியரின் ஆறு மாத பெண் குழந்தை திடீரென்று காணாமல் போன நிலையில், ஓசூர் நகர காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்து மணி நேரத்தில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்திச்சென்ற பெங்களூரைச் சேர்ந்த பெண்ணைக் கைதுசெய்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் 'பைக்' பந்தயம்
திண்டுக்கல்: திண்டுக்கல், கரூர் சாலையில் உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் தென்மாநில அளவிலான 'பைக் ரேஸ்' போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த நான்கு வயது சிறுவர்கள் முதல் 40 வயது பெரியவர்கள்வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
700 மீட்டர் தூரம் கொண்ட சுற்றுப் பாதையை பெரியவர்கள் 8 முறையும் சிறியவர்கள் மூன்று முறையும் சுற்றிவந்தனர். செம்மண் நிலத்தில் இருந்த தடைகள், பள்ளம், மேடு, சறுக்கல், வளைவுகளில் சீறிப்பாய்ந்த வீரர்களைப் பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப் படுத்தினர். முதல் பரிசாக 12,000 ரூபாயுடன் சுழல் கிண்ணமும் இரண்டு, மூன்று, நான்காம் பரிசுகளாக முறையே ரூ.8,000, ரூ.4,000, ரூ.1,000 ரொக்கமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டன.
கிராம, நகரசபைக் கூட்டத்தில்
பங்கேற்க தாம்பூலத்துடன் அழைப்பு
ராசிபுரம்: தமிழகத்தில் இன்று கிராம, நகர சபைக் கூட்டங்களை நடத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. வேளாண், உழவர் நலத்துறையின் திட்டங்களால் பயனடைந்த விவசாயிகளின் விவரம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நகரசபைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற 12வது வார்டு கவுன்சிலர் சசிரேகா வெற்றிலை, பாக்கு தாம்பூலத்துடன் குங்குமம் கொடுத்து அழைப்பு விடுத்துள்ளார். அவரது இந்தச் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
'ஓபிஎஸ்-இபிஎஸ் போல மணமக்கள் இருக்கக்கூடாது'
கள்ளக்குறிச்சி: திமுக எம்எல்ஏ உதயசூரியன் இல்லத் திருமண விழாவில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசியபோது, மணமக்கள் விட்டுக்கொடுத்து கருணாநிதியும் தமிழும் போல ஒற்றுமையாக வாழவேண்டும் எனவும் ஓபிஎஸ்-இபிஎஸ்போல் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். இதனைக் கேட்டு திருமணத்தில் பங்கேற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர். இந்தக் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
காவிரியில் 70 இடங்களில் தடுப்பணை கட்ட வலியுறுத்து
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசனத் திட்டங்களான ஏரி, குளங்களை மீட்டெடுக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது நாளாக நேற்று நடைப்பயணம் மேற்கொண்டார். காவிரியில் 70 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரியலூர் கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி பேசிய போது, "நீ்ர்நிலைகள் சோழர்கள் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய சொத்து, வரம். இம்மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளை உருவாக்கி செழிக்க வைத்திருந்தனர். ஆனால், இன்றைக்கு வறட்சி, குடிநீர் இல்லாத மாவட்டமாக உருமாறியுள்ள அரியலூரில் சோழர்களின் பாசனத் திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன்," என்றார்.

