சென்னை: ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் 'பிங்க்டோபர்' என்ற பெயரில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதற்கென சென்னை விமான நிலையத்தில் இளஞ்சிவப்பு நிறப் பதாகைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன.
இவ்வாண்டு அக்டோபர் 1 முதல் 31ஆம் தேதி வரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அங்கு நடைபெற்ற நிறைவு விழா வில் ஓய்வுபெற்ற தாம்பரம் காவல் ஆணையர் ரவி கலந்துகொண்டு பேசியபோது, "பெண்கள் குடும்ப விளக்காக, தூணாக உள்ளவர்கள். உடற்பயிற்சி, சரியான உணவுமுறை இருந்தால் எவ்விதமான புற்று நோயையும் தடுக்கலாம் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே, பெண்கள் விழிப்புணர்வுடன் இருந்து இது போன்ற புற்றுநோய் வராமல் காத் துக்கொள்ளவேண்டும்," என்றார்.