சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்களில் ஒரு தரப்பினர் கிராம சபைக் கூட்டத்தில் விமான நிலையப் பணிகளுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
புதிய விமான நிலையம் அமைந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, ஏகனாபுரம் கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்நிலையில், விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் இழக்க நேரிடுவதாக குறிப்பிட்டுள்ள அக்கிராம மக்கள், நேற்று முன்தினம் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மேலும், நேற்று முன்தினம் கொட்டும் மழையிலும் அக்கிராம மக்கள் 98வது நாளாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கண்டன முழக்கங்களை எழுப்பி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தங்களுடைய வாழ்வாதாரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

