சென்னை: சென்னையில் கனமழை தணிந்து, பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்ததால் நேற்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் சென்னை மாநகரம் மீண்டும் பழைய சுறுசுறுப்புக்குத் திரும்பி வருகிறது.
நீர் தேங்கி நின்ற 16 சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி யின் பெரும்பாலான பகுதிகளில் மேலும் நான்கு நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக கோவை, தேனி, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங் களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாற்று அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பெருமாள் நகர் தெருக்களில் தேங்கிய நீர் வடியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
காட்பாடியில் மழை தீவிரமாக பெய்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக வேலூர் மாவட்டத்தில் 26 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
இதனிடையே, சென்னையில் மழைநீர் அகற்றும் பணி 95% நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
"சென்னையில் ஒருசில இடங்களில் நீர் தேங்குகிறது. இதற்கு நிரந்தர தீர்வுகாண நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை, ரயில்வே துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்," என்றார் அவர்.
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் 39 ஏரிகள் நிரம்பியுள்ளன.
இவ்விரு மாவட்டங்களிலும் மொத்தமாக 909 ஏரிகள் உள்ள நிலையில் செம்பரம்பாக்கம், சித்தேரி, அகரம் உள்ளிட்ட 39 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ள தாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பதுபோல் அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் சென்னை மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். மழைநீர் வடியாத இடங்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
பருவமழையின் முதல்நாளில் சென்னையில் தேங்கிநின்ற மழை நீரால் மக்கள் சொல்லொண்ணாத் துயரம் அனுபவித்ததாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
அதற்கு, அதிமுக ஆட்சியில் வடிகால் பணிகளை முறையாகச் செய்திருந்தால் இப்படி பாதிப்பு ஏற்பட்டிருக்காது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் இன்னும் முழுமையாக வடியாமல் உள்ள மழைநீரில் நின்றபடி வாழைப்பழங்களை விற்பனை செய்வதற்காகக் காத்திருக்கும் பெண். படம்: இபிஏ

