சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எதிர்வரும் 9ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அதன் பின்னர் நவம்பர் 12 முதல் 14ஆம் தேதி வரை மழை வலுக்கும் என்றும் அம்மையம் முன்னறிவித்துள்ளது.
இலங்கை கடற்கரையை ஒட்டிஉள்ள கடற்பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வடமேற்குத் திசையில் தமிழகம், புதுவை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இன்று அல்லது நாளைதான் காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வு குறித்து உறுதியாகச் சொல்ல முடியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.
நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் தொடக்கத்திலேயே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.குமரிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறும் பட்சத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்க முடியும் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
வேகமாக நிரம்பும் ஏரிகள், குளங்கள்
இதற்கிடையே, தொடர் மழையால் தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள அதே வேளையில், பல மாவட்டங்களில் சம்பா பயிர்கள், விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கி இருப்பது விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் 32 ஏரிகள் நிரம்பிவிட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், அம்மாவட்டத்தில் ஏரிகள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இப்போது முழுவதும் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
இதேபோல் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமராவதி அணை மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது.
தயார் நிலையில் 65 ஆயிரம் பேர்
இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு நிலையையும் பருவ மழையையும் எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த 65 ஆயிரம் முன்களப் பணியாளர்கள் இதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

