சேலம்: பிறந்து நான்கு நாள்களே ஆன பச்சிளங்குழந்தையை விற்க முனைந்த மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவது குழந்தையை விற்க முடிவெடுத்தார் கஸ்தூரி எனும் பெண். கஸ்தூரிமேல் அவரது கணவர் சந்தேகப்பட்டதால் கர்ப்பகாலத்திலேயே அவர் தனது சகோதரி வீட்டில் வசித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தனது சகோதரியின் தோழி வளர்மதி எனும் மாதிடம் நான்கு நாளான சிசுவைக் கொடுத்தார்.
வளர்மதியும் அவரது கணவர் மதியழகனும் லதா எனும் இடைத்தரகர் மூலம் எடப்பாடியைச் சேர்ந்த அன்பு எனும் ஆடவரிடம் ஐந்து லட்ச ரூபாய்க்குக் குழந்தையை விற்க முயன்றனர். இந்தத் தகவல் அறிந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
அன்பு தலைமறைவாகி விட்டதாகவும் அதிகாரிகள் அவரைத் தேடி வருவதாகவும் கூறப்பட்டது.
வளர்மதியும் லதாவும் கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

