சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கடைசி ஆறு பேரை விடுவிக்க அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நளினி நேற்று விடுதலை ஆனார்.
31 ஆண்டுகள் கழித்து என் மகள் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நளினி யின் தாயார் பத்மா தெரிவித்தார்.
நளினியைத் தொடர்ந்து முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர்.
இதற்கிடையே ஆறு பேரில் ஒருவரான நளினி, நியூஸ் 18, விகடனுக்கு அளித்த பேட்டியில், பேரறி வாளன் விடுதலைக்குப் பிறகு ஆறு பேரும் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை இருந்தது என்று கூறிஉள்ளார்.
"நாங்கள் ஆறு பேரும் பேரறிவாளனும் எந்த தவறும் செய்யாதவர்கள் என்பதால் உண்மை மீது நம்பிக்கை இருந்தது. 32 வருடங்களாக சிறையில் இருந்துள்ளோம். ஆறு பேரும் அவரவர் குடும்பத்தினருடன் சேரவிருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது, எனது மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப் பட்டார். இந்த வழக்கில் 1998ஆம் ஆண்டு 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக் குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய ஏழு பேரும் தூக்குத் தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீண்ட நாள்களாக நடைபெற்ற நிலையில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய ஆறு பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவு பிறப் பித்தனர்.
விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி, தமிழக அரசே நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம்," என்றார்.
ஆறு பேரில் ஒருவரான முருகன், மனைவியுடன் தங்கியிருக்கப் போவதாக தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
முருகன் மற்றும் சாந்தனுவை நேற்று முன்தினம் மாலை வழக்கறிஞர் ராஜகுரு சந்தித்துப் பேசினார்.
"விடுதலை குறித்து தகவல் அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
"முருகன் வெளியே வந்த பின்னர் தனது மனைவியுடன் தங்கியிருக்கப் போவதாகத் தெரிவித்தார். மேலும் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் தங்கியிருப்பதா அல்லது லண்டன் செல்வதா என்பது குறித்து முடிவு செய்யவிருப்பதாக முருகன் தெரிவித்தார்," என்று வழக்கறிஞர் ராஜகுரு மேலும் தெரிவித்தார்.

