சென்னை: தமிழகத்தில் ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பு களுடன் தொடர்பில் இருப்பவர்கள் என 102 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சந்தேக நபர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதில், ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபின், 29, தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி பலியானார்.
இதன் பின் இவரது கூட்டாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் வீடுகள் உட்பட தமிழகம் மற்றும் கேரளாவில் வியாழன் அன்று 43 பேரின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலானய்வு முகவையின் அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஐ.எஸ். உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என 102 பேர் அடையாளம் காணப்பட்டனர் என்று தினமலர் தகவல் தெரி வித்தது.
இவர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடைேய சென்னை, மண்ணடி மரைக்காயர் தெருவில் உள்ள அலுவலகம் ஒன்றில் 2021 மார்ச் மாதம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிடச் சென்றனர்.
அப்போது, அங்கிருந்த மூன்று பேர் அதிகாரிகளை தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மண்ணடியைச் சேர்ந்த மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் பறிமுதல் செய்யப் பட்டதாக நம்பப்படும் 50 லட்சம் ரூபாய், 16 லட்சம் ரூபாய்க்கான வெளிநாட்டுப் பணம் உள்ளிட்டவை வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதான மூவரில் இருவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், இவர்களது அலுவலகத்தில் சோதனை நடத்தினர் என்று காவல்துறை கூறியது.