சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுவடைந்து தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தமிழகம் - புதுச்சேரி கடற்பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் அதிக கனமழையும் பெய்து வரு கிறது.
சீர்காழியில் அதிகபட்சமாக 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது.நேற்று காலை 6 மணி நிலவரப் படி மயிலாடுதுறையில் 161.6 மிமீ மழையும் சீர்காழியில் 436 மிமீ மழையும் கொள்ளிடத்தில் 316.8 மிமீ மழையும் செம்பனார்கோவிலில் 242.3 மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை முழுவதும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மதுரை வைகை ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. ஏற்கெனவே அதிகபட்ச மழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் டேனிஷ் கோட்டையை மழைநீர் சூழ்ந்தது. இதுவரை இப்படியொரு மழையை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏரியில் இருந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப் படும் நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
மேலும், ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். தற்போது உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களை மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் ஏற்படும் சவால்களை திறம்பட சமாளிக்க மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்கள் ஆயத்தமாக இருக்க முதல்வர் உத்தரவிட்டார்.

