போலி பெயரில் கடப்பிதழ்: சிங்கப்பூரில் இருந்து வந்த ஆடவர் கைது
திருச்சி: போலி பெயரில் உள்ள கடப்பிதழ் மூலம் சிங்கப்பூரில் இருந்து வந்த ஆடவர் திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார். இதையடுத்து விமான நிலைய காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சனிக்கிழமை பின்னிரவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த 42 வயது ஆடவரின் கடப்பிதழ் மீது குடிநுழைவுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து விசாரணை நடத்தியதில் அவர் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலைச் சேர்ந்த வீரமுத்து என்பது தெரியவந்தது. ஆனால், சலீம் என்ற போலியான பெயரில் அவர் கடப்பிதழ் பெற்றிருந்தார்.
போக்குவரத்து அமைச்சு: இனி மாநில மொழிகளிலும் விழிப்புணர்வு வாசகங்கள்
சென்னை: சாலை பாதுகாப்பு குறித்து மாநில மொழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது. இனி வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு கைபேசி மூலம் விழிப்புணர்வு வாசகங்கள் தமிழிலும் அனுப்பப்படும். 'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்', 'அதிக வேகம் வேண்டாம்- உயிர் பறிபோகலாம்' என்பன போன்ற வாசகங்கள் இவ்வாறு அனுப்பப்படும் என்றும் சில மாநிலங்களில் இம்முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது. இதற்கு முன்பு இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதிமுகவால் தனித்துப் போட்டியிட முடியும்: செங்கோட்டையன் பேச்சு
ஈரோடு: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவால் தனித்து போட்டியிட முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறது. திமுக தலைமை நாடாளு மன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அதிமுக தலைமையும் தேர்தல் பணிகளைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை யில், ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் எந்தத் தேர்தலாக இருப்பினும் தனித்துப் போட்டி யிடக்கூடிய வலிமை உள்ள ஒரே கட்சி அதிமுகதான் என்றார்.

