விழுப்புரம்: தமிழக வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்படும் புதிய குடியிருப்புகள் நூறு விழுக்காடு முழுமையாக தரத்துடன் கட்டப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
புதிதாக கட்டப்பட உள்ள கட்டடங்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருக்க வேண்டும் என கட்டுமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் 60 இடங்களில் புதிதாக 10,000 குடியிருப்புகள் கட்டப்படும் என்று தெரிவித்த அவர், அக்குறிப்பிட்ட அறுபது இடங்களில் உள்ள வாடகை குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளதாகக் கூறினார்.
"நீண்ட காலத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்டடங்கள் கட்ட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். புதிதாக கட்டப்பட உள்ள 10 ஆயிரம் குடியிருப்பு வீடுகளும் ஒரே கட்டமாக கட்டி முடிக்கப்படும்.
தற்போதுள்ள கட்டடங்கள் அனைத்தும் 1999ஆம் ஆண்டு கட்டப்பட்டவை. அவை குறுகிய காலத்திற்குள்ளாகவே பழுதடைந்துள்ளன. எனவே புதிய குடியிருப்புகள் தரமாக இருப்பது உறுதி செய்யப்படும்," என்று அமைச்சர் முத்துசாமி மேலும் தெரிவித்தார்.

