கடலூர்: தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து அந்த அணைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அண்மைய சில நாள்களாக கனமழை நீடித்து வருகிறது.
தமிழக அணைகளுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர், கேஆர்பி, வைகை அணை என மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அணைகளுக்குமான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து 20,200 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால், இந்த உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50.25 அடியாக இருந்தது. விநாடிக்கு 5,829 கன அடி தண்ணீர் வந்ததை அடுத்து, அது மொத்தமாக வெளியேற்றப்பட்டது.
வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி என்றும் அதில் தண்ணீர் இருப்பு 70 அடியாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, பைக்காரா, சோலையார் என முக்கியமான அணைகள் அனைத்துமே கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.
அணைகளில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாள்களில் மழை மேலும் வலுக்கும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறைகள் தீர்க்கப்படும் என முதல்வர் உறுதி
இதற்கிடையே, தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்த குறைகள் உடனடியாக சரி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சீர்காழி, மயிலாடுதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 150 சிறு ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அங்கு தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன.
மூன்று நாள்கள் மழை நீடிக்கும்
இத்தகைய சூழலில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் மூன்று நாள்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வங்கக் கடலில் கடந்த 10ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது வலுவடைந்த காரணத்தால் சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத வகையில் 44 சென்டி மீட்டர் மழை பதிவானது. அங்கு பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை வெயில் எட்டிப் பார்த்த நிலையில், இரவு பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் கேரள, தமிழகப் பகுதிகளில் மீண்டும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.