சென்னை: குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் சென்னையில் காவல்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டது. மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் வாகனச் சோதனை நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று 698 பழைய குற்றவாளிகள் தற்போது எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்காக பழைய குற்றவாளிகளின் தற்போதைய வசிப்பிடத்துக்கு காவல்துறையினர் நேரில் சென்றனர். அவர்களில் 24 பேரிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது.
இதுதவிர சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
"தலைமறைவாக இருந்த ரவுடிகளில் இருவர் பிடிபட்டனர். அண்மைய சில மாதங்களில் 467 ரவுடிகள் கைதாகி உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்.
"நேற்று முன்தினம் 4,562 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன," என்றும் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை கள் தொடரும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

