மயிலாடுதுறை: மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 இழப்பீடாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இந்த நிவாரண நிதியை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "மழை காரணமாக எங்களது அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பணிக்குச் செல்லமுடியவில்லை. வீட்டிற்குத் தேவையான அத்தியா வசியப் பொருள்கள் வாங்கவே ரூ.3,000 வரை செலவாகும் நிலை யில், ரூ.1,000 நிவாரணத் தொகை போதுமானது அல்ல.
"எனவே, அரசு தங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.5000 வழங்கவேண்டும்," என்று வலி யுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திரு வள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு தொடர்கிறது. அங்குள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பல இடங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கியுள்ள பகுதி களில் சென்று வருவதற்கு குழந்தை கள், பெரியோர் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று உருவாகும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் கட லோரப் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியதால் சாலை மறியல்
சேலம் மாவட்டம், சிவதாபுரம் அருகே குடியிருப்புகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்மழை காரணமாக அங்குள்ள ஆண்டிப்பட்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
இதனால், 10 நாள்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கியிருப்பதாகக் கூறும் பொதுமக்கள், தங்கள் உணவுப் பொருள்கள், உடைமைகள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து பாழாகிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.
மின்னல் தாக்கி மூவர் பலி
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் சஞ்சய், மகள் சஞ்சிதா ஆகிய இருவரையும் பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மிதிவண்டியில் சென்ற அவரது தம்பி இளையராஜா ஆகிய மூவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
1.16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையால் இதுவரை 1 லட்சத்து 16,000 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி சேத மடைந்து உள்ளதாக வேளாண் உழவர் நலத் துறை தகவல் வெளி யிட்டுள்ளது. இதில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களைத் தவிர நெற்பயிர் மட்டும் ஒரு லட்சத்து 13,000 ஏக்கர் அளவுக்கு முழுவது மாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப் பட்டுள்ளது.

