சென்னை: மருத்துவர்களின் தவ றான சிகிச்சையால் பிரியா என்ற காற்பந்து வீராங்கனை நேற்று காலை உயிர் நீத்தார்.
"மாணவி பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த இரு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி கூறியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா, 17, அங்குள்ள ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துவந்தார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவரான பிரியா, மாநில, தேசிய அளவிலான காற்பந்துப் போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பிரியாவின் காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் சவ்வு விலகி இருப்பதாகக் கூறியுள்ளனர். இதை யடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னரும் அவரது கால் பாதிப்பு சரியாகாமல் வீக்கம் ஏற்பட்டதால், மேல்சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதும், அதனால்தான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கால் வீங்கியதும் தெரியவந்தது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக்கூறி அவரது வலது கால் அகற்றப்பட்டது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரியா, சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்தார்.
"பிரியாவுக்கு சவ்வுதான் கிழிந்து உள்ளது. இதற்குப் பெரிய மருத்துவமனை எதுவும் தேவையில்லை," என மருத்துவர்கள் கூறினர். ஆனால், அவர் உயிரிழப்பார் என நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்க வில்லை. மருத்துவர்களின் அலட்சியப் போக்கு, தவறான சிகிச்சை முறையே எங்கள் மகள் பிரியா உயிரிழக்கக் காரணம்.
"மருத்துவர்களின் அலட்சியத்தால் என் மகளின் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் கானல் நீராகி விட்டது. பிரியா இறப்புக்கு காரண மான மருத்துவர்களைக் கைது செய்யவேண்டும்," என உயிரிழந்த பிரியாவின் தந்தை ரவிக்குமார் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.

