புதுடெல்லி: நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனு பவித்து வந்த நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்ச ரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் தொடர்ந்து மௌனம் காத்து வந்ததால், அதனை எதிர்த்து பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரையும் கடந்த 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், இவ்விவகாரத்தில் மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்ட வசமானது என்றும் விமர்சித்தார்.
இதேபோல், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ஏழு பேரின் விடுதலையில் மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்யாவிட்டால் காங்கிரஸ் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் என்று கூறினார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி யின் தொடர் அழுத்தங்களால் ராஜீவ் கொலை வழக்கில் சீராய்வு மனுத் தக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

