சென்னை: இந்தியாவிலேயே ஆகப்பெரிய ஐஃபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 60,000 பேர் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகளை டாடா குழுமம் மேற் கொண்டு வருகிறது.
சீனாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஐஃபோன் தொழிற்சாலை பல்வேறு காரணங் களால் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று ஏற்பாட்டை செய்வதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி வந்தது. இந்தச் சூழலில்தான் இந்தியாவில் புதிய ஆலையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 53,000 பேரை பணியில் அமர்த்த முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் ஓசூர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
"ஏற்கெனவே ஐஃபோன் உதிரிப் பாகங்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான், ஃபெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐஃபோன் தயாரிப்புப் பணிகளை விரிவாக்கம் செய்யும் வகையில் பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது.
"முதல் கட்டமாக 5,500 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 50 விழுக்காட்டிற்கும் மேலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களில் மட்டும் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பாதுகாப்பான தொழில் சூழல் காணப்படுகிறது.
"புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவது என்றாலும், தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வது என்றாலும் தமிழகத்தில் நல்லதொரு சூழல் நிலவுகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசின் தொழில்துறை செய்து தருகிறது," என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.